எழுச்சி

 

தமிழனே இது கேளாய்- உன்பால்

சாற்ற நினைத்தேன் பல நாளாய்

 

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு!

காணும் பிற மொழிகளோவெறும் வேம்பு!

நமையெல்லாம் வடமொழி தூக்கிடும் தாம்பு!

நம் உரிமைதனைக் கடித்தப் பாம்பு!

 

தமிழனே இது கேளாய்.....

 

தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு!

தமிழே ஞாலத்தில் தாய்மொழிப் பண்டு!

கனிச்சாறு போற்பல நூலெல்லாம் கண்டு

காத்ததும் அளித்ததும் தமிழ்ச்செய்த தொண்டு!

 

தமிழனே இது கேளாய் ....

 

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்!

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்!

நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்!

நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்!

 

தமிழனே இது கேளாய் ...

          

பாவேந்தர் பாரதிதாசனார