குண்டு போடு

 

தமிழுக்கு நீசெயுந் தொண்டு- நின்

பகைமீது பாய்ச்சிய குண்டு

 

தமிழில்நீ புலமைபெற வேண்டும்-அது

தமிழ்பெறத் தமிழரைத் தூண்டும்.

தமிழிலே யேபேச வேண்டும்-அது

தனித்தமிழ் வளர்ச்சியைத் தூண்டும்.

 

தமிழ் பேசு; தமிழிலே பாடு- நீ

தமிழினிற் பாடியே ஆடு.

தமிழ்ப்பாட்டை யேகாதிற் போடு- தமிழ்

தப்பினால் உன்காதை மூடு.

 

வாணிக விளம்பரப் பலகை- அதில்

வண்தமிழ் இல்லாவிடில் கைவை.

காண்கநீ திருமண அழைப்பைப்- பிற

கலந்திருந்தால் அதைப் புய்புய்

 

பொருள்களைத் தமிழினில் அழைப்பாய்- பிற

பொருந்தாப் பெயர்களை ஒழிப்பாய்

தெருப்பெயரில் தமிழே இழைப்பாய்- அதிற்

சீறுவார் மடமையை ஒழிப்பாய்

 

தமிழிலே வழிபாடு வேண்டிப்- பின்

தளர்ந்தனன் முன்னமோர் ஆண்டி

அமைவாக அவனையும் தூண்டி- நீ

அறஞ்செய்க சோம்பலைத் தாண்டி.

 

வடமொழி புகழ்ந்திடும் தமிழ்வாய்-எதிர்

வரக்காணில் காறிநீ உமிழ்வாய்

கடனென்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய்-ஒரு

கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய்

             

பாவேந்தர் பாரதிதாசனார்

 

 

 

 

 

 

 
     
Free Web Hosting