அறிவியல் என்றால் என்ன ?

 

               நாம் வாழும் இந்தக் காலம் அறிவியல் ஊழி எனப்படுகிறது. எந்தச் சிக்கலானாலும் சூழ்நிலையானாலும் சரி அறிவியல் முறையில் அதை அணுகுவதுதான் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவி இருக்கிறது.

 

      அறிவியல் உலகத்தில் ஏற்பட்டுள்ள விந்தையானவையும் மிக முடுக்கமானவையுமான முன்னேற்றங்கள், அவ்வன்றின் வழியே மேலைநாடுகள்  கண்டுள்ள செல்வ வளம், இவையெல்லாம் இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைகின்றன.

 

     ஆனால் அதே நேரத்தில் அறிவியல் ஆராய்ச்சியால் எதிர்புதிரான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. இவை மக்களினத்தின் எதிர்காலத்திற்கும் ஆயுளுக்குமே கூட  இடர்பாடாக அமைகின்றன. எனவே மூடநம்பிக்கைகளை அகற்றுவதே அறிவியலால் ஏற்படுகின்ற மிகப்பெரிய நலம் என்று சொல்லுகின்ற போதே, எல்லா நலங்களையும் அறிவியலின் மூலமே பெற்றுவிடலாம் என்று எண்ணுவதும் ஒரு மூட நம்பிக்கைதானோ எதிர் கேள்விகள் எழுகின்றன.

 

      முதலில் அறிவியல் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்தைக் காண்போமா? மாந்த முயற்சியின் இந்தத் துறையை ஆங்கிலத்தில் Science என்று குறிப்பிடுகிறோம். தமிழில் கொஞ்சம் காலம் முன்பு வரை வட மொழி அடிப்படையில் இதனை விஞ்ஞானம் என்று சொல்லி வந்தோம். இப்போது அதையே அறிவியல் (அறிவு + இயல்) என்று சொல்கிறோம். இந்த வெவ்வேறு மொழிச்சொற்களை ஆராய்ந்து பார்த்தாலே சில அடிப்படைக் கருத்துகள் தெளிவாகின்றன.

 

       இலத்தின் மொழியில் Scientia என்ற சொல் அறிவையும், அறிவால் உணர்ந்த செய்திகளையும் குறிக்கும் Sci - என்ற சொல் மூலம் Scire என்ற இலத்தீன் சொல்லையும் தருகிறது. Scire வினைச்சொல். தெரிந்து கொள்ளுதல், அறிதல் ஆகிய செயல்களைக் குறிக்கும் சொல் Scire. இந்தச் சொல்லின் அடிப்படையில் எழுந்த சொல்தான் நாம் இன்று வழங்கும் Science என்னும் சொல்.

 

   தொடக்கக் காலத்தில் Science மாந்தன் தன் புலன்களின் வழியே பெறும் பட்டறிவின் மூலம் உணர்ந்து தெரிந்து கொண்டவற்றைக் குறித்தது. இப்படி தெரிய வந்தவை வெறுமனே ஏற்றுக்கொள்ளப்பட்ட சரிபார்க்கப்படாத நம்பிக்கைகளிலிருந்து தன்மையில் வேறுபட்டவை. எடுத்துக்காட்டாக பெண்களுக்கு ஆண்களைவிட பற்களின் எண்ணிக்கைக் குறைவு என்று மெய்யறிவியல் மேதையான அரிஸ்டாட்டில் (கி.மு. 384 - 322 ) கூட நம்பினார் என்பார்கள். இது எளிதிலே சரி பார்க்கக்கூடிய ஒரு செய்திதான். அப்படிப் பார்த்தால் இந்த நம்பிக்கை ஆதாரம் இல்லாத ஒன்று என்பது தெரியும். இப்படிச் சரி பார்த்து அறிந்த உண்மை அறிவியலுடன் ஒப்பியது.  அஃதாவது அறிவியல் உண்மை (Science fact). அவ்வாறு சரிபார்த்து ஒப்புமை நிலை நாட்டப்படாதது அறிவியல் சாரா நம்பிக்கை ( Unscientific belief ) எனப்படும்.

 

 

 

 

நன்றி : தமிழ் நெறி

Free Web Hosting